தாய்பால் ஊட்டும் போது ஏற்படும் பூஞ்சை நோய்

தாய்பால் ஊட்டும் போது ஏற்படும் பூஞ்சை நோய்

 

இது ஒரு ஈஸ்ட் தொற்று

பூஞ்சைத் தொற்று :

தாய்பால் ஊட்டும் பெண்களிடையே பொதுவாக காணப்படும் ஈஸ்ட் அல்லது பூஞ்சான் தொற்றை த்ரஷ் என்று கூறுவார்கள். இது காண்டியா ஆப்லிக்கன்ஸ் எனப்படும் ஒருவகை பூஞ்சைகளால் ஏற்படும் தொற்றாகும். இந்தவகை பூஞ்சைகள் மனித உடலிலும், முக்கியமாக தோல் மற்றும் வாய்பகுதியில் உள்ளது. இதை மற்ற உடம்பில் நன்மை தரும் பாக்ட்டீரியாக்களால் பரவாமலும், பிரச்சனை செய்யாமலும் தடுக்கப்படுகிறது. நன்மை தரும் பாக்ட்டீரியாக்களின் எண்ணிக்கை குறையும் போதும், அவை இறக்கும் போதும் இந்த பூஞ்சான்கள் வேகமாக வளர்ந்து, பால்ஊட்டும் தாய்மார்களின் வாய், உதடுகள், மார்பகங்கள் மற்றும் காம்புகளில் வெண் திட்டுக்களாக உருவாகின்றன.

நோய்க்கு எதிராக கொடுக்கும் ஆன்டிபையோட்டிக் மருந்துகளை வேறு நோய்க்காக தாய்மார்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் இந்த தொற்று ஏற்படுகிறது. அவ்வாறு பயன்படுத்தும் போது மற்ற தொற்றுக்கள் ஒழிந்தாலும், கூடவே உடலிலுள்ள நன்மை தரும் பாக்டீரியாக்களையும் ஆன்டிபயோட்டிக் மருந்துகள் கொன்று விடுகின்றன. இதனால் காண்டியா ஆப்லிக்கன்ஸ் பூஞ்சைகள் அதிக அளவில் வளரத் தொடங்கி வெண்திட்டுக்களை உருவாக்குகின்றன.

இந்தப்புண்கள் தாய்மார்களுக்கு அதிக வலியைத் தரும் பட்சத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதனால் குழந்தைகளின் வாய்க்கு இந்த நோய் பரவுவது தடுக்கப்படுகிறது.

அடையாளம் மற்றும் அறிகுறிகள்;

பாலூட்டும் தாய்மார்களை தாக்கும் த்ரஷ் எனப்படும் பூஞ்சை நோய் முதலில் மார்புக்காம் பின் நுனியில் எரிச்சலான வலியைத் தருவதுடன், மார்பிலும், காம்பிலும் அரிப்பை உண்டாக்குகிறது. அப்போது அப்பகுதிகளிலுள்ள தோல் மினுமினுப்பாக மாறுகிறது.

மேலும் இப்பகுதி வெளிர்ந்து காணப்பட்டு அனைத்துப் பகுதிகளுக்கும் வலி பரவுவதோடு, மற்றொரு மார்புக்கும் இந்நோய் பரவுகிறது. இப்பகுதிகளில் ஏற்படும் வீக்கத்தால் ஊசி குத்துவது போல் வலியுண்டாவது மட்டுமல்லாமல், மேலே அணிந்திருக்கும் ஆடையாலும் ஒருவித உறுத்தல் ஏற்படுகிறது.

சில பெண்களுக்கு பிரசவ வலியைவிட அதிக வலியை இந்த நோய் ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் தொடர்ந்து பாலூட்டும் போது மிக அதிகமான வலி ஏற்படுகிறது. குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்கள் அதற்க்கான மாத்திரைகளை உண்ணும் போதும், வேறு மருத்துவ காரணங்களாலும் இது போன்ற தொற்றுக்கள் உண்டாகின்றன.

குழந்தைகளிடையே காணப்படும் அறிகுறிகள்:

இந்தநோய்க்கான அறிகுறிகள் தாய்பால் குடிக்கும் குழந்தைகளின் வாயிலும், வீக்கத்தையும், வீங்கிய நாக்கிலும் வெண்மை நிறத்தை ஏற்படுத்துகின்றன. சிலசமயங்களில் வெண்திட்டுக்களாகவும், இதை அகற்றப்படும் போது இரத்தம் தோய்ந்த நிலையிலும் காணப்படும். இந்த வெண்திட்டுக்கள் சிவப்பு நிற சதையால் சூழப்பட்டிருப்பதுடன், இந்த அறிகுறிகள் தென்படும் குழந்தை ஓய்வுறக்கமின்றி, வலியால் தவிப்பதுமின்றி, பால் குடிக்கும் போது அதிக தொந்தரவுகளுக்கு உள்ளாகும். குழந்தைகள் மார்பகங்களை பிடித்து இழுப்பது மட்டுமன்றி, பால் குடிக்கவும் மறுக்கும். குழந்தைகளின் வாயில் இந்த நோய்தொற்றியதற்கான அறிகுறிகள் தெரியும். சில சமயங்களில் குழந்தைகளின் பின்புறம் உள்ள சதைப்பகுதி (buttocks ) சிவப்பாகவோ அல்லது பிரவுன் நிறத்திலேயோ காணப்படும். இதை குணமாக்க பெட்ரோலியப் பொருட்களான ஜெல்லி அல்லது வாசலினை பயன்படுத்தினாலும் அதனால் பயன் எதுவும் இருக்காது. ஏனெனில் பூஞ்சாணத்துக்கான முக்கிய உணவாக பெட்ரோலிய பொருள்களான ஜெல்லியும், வாசலினும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதை உபயோகிக்கக்கூடாது.

பூஞ்சான் வளர்ச்சியால் ஆபத்து:

த்ரஷ் எனப்படும் இந்த பூஞ்சான்கள் வர பல காரணங்கள் இருந்தாலும், ஆண்டிபையோட்டிக் மருந்துகளை தாய்மார்கள் உபயோகப்படுத்துவதே முக்கிய காரணமாகும். பூஞ்சான்களால் தாய் பாதிக்கப்பட்டு, குழந்தைகளுக்கு புட்டிப்பால் ஊட்டப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அதனால் மீண்டும் பூஞ்சை நோய் உருவாகவும் வாய்ப்புண்டு. பிற செயற்கை உணவுகளை குழந்தைகள் உண்பதாலும் இது போன்ற ஆபத்துக்கள் உருவாக வாய்ப்பு ஏற்படுகிறது.

பாலூட்டும் தாய்மார்கள் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாக இருந்தாலும், சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களாக இருந்தாலும், இரத்தசோகை நோயாளிகளாக இருந்தாலும் இந்த தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.  மேலும் ஸ்டீராய்டு மாத்திரைகள், கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தினாலும் இந்த தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

தடுப்பு முறைகள்:

குழந்தைகள் மற்றும் தாய்க்கு அதிக துன்பத்தை தரும் இந்த பூஞ்சைத்தொற்றை ஒழிக்க ஒவ்வொரு முறை பாலூட்டிய பிறகும், பால்கொடுப்பதற்கு முன்பும் கைகளை நன்றாக கழுவிக் கொள்வதுடன், அடிக்கடி கிரீன் டீ குடிப்பது நல்லது. குழந்தைகளின் இடுப்புத் துணியை ( டையாப்பர் ) அடிக்கடி துவைப்பதும், தொடர்ந்து நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம். சர்க்கரை அதிகமுள்ள உணவுப் பொருட்களை உண்பது இதுபோன்ற பூஞ்சான் தொற்றுகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

சிகிச்சை மற்றும் கவனிப்பு:

இந்த தொற்று நோயை தடுப்பதற்கான வழிமுறைகள் சிகிச்சைக்குரிய மருந்துகள் கிரீம்கள் மட்டுமல்லாமல் முறையான சுகாதார நடைமுறைகள் மற்றும் உணவுப் பொருள்களை உள்ளடக்கியதாகும். அடிக்கடி மருத்துவர்களை கலந்தாலோசித்து, அவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் பூஞ்சைக்கெதிரான கிரீம்களை மார்பகங்களில் பயன்படுத்தவும். மருந்துகளை முறையாக பயன்படுத்தினால் அதிக அளவில் நோய் பரவுவதை தடுக்கலாம்.  குழந்தைக்கு பாலூட்டியதும் அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தம் செய்து கொள்வதுடன், குழந்தைகளின் துணிகளை மாற்றி சரியான ஆரோக்கியத்தை கடைபிடிக்க வேண்டும். மார்பகக் காம்புகள் எப்போதும் உலர்ந்த நிலையில் இருப்பதுடன் உங்கள் டவல் துண்டுகளை குடும்பத்திலுள்ள மற்றவர்கள் பயன்படுத்தாத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்களுக்கும் இந்த பூஞ்சான்கள் தொற்ற வாய்ப்புண்டு. இரசாயனம் கலந்த குளியல் சோப்புகளை பயன்படுத்தினால் நன்மைதரும் பாக்டீரியாக்களை கொல்ல வாய்ப்புள்ளதால், அரை கப் வினிகரை நீரில் கலந்து குளிக்கவும்..

தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், நல்ல சத்தான, சுகாதாரமான உணவை உட்கொள்வதுடன், அதிக அளவில் தண்ணீர் அருந்துவது நல்லது. சர்க்கரை குறைந்த உணவுப்பொருள்களை சாப்பிடுவதுடன், ஜூஸ் போன்ற வெளியிலிருந்து வாங்கி சாப்பிடும் பொருட்களை தவிர்க்கவும். இதுபோன்ற நேரங்களில் புட்டிப்பால் கொடுப்பதை அளவுடன் வைத்துக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் மீண்டும் தொற்று ஏற்பட வழி வகுத்துவிடும்.

நோயெதிர்ப்பு குணம் வாய்ந்த உணவுப் பொருட்களை உண்பதால் நன்மை தரும் சக்திவாய்ந்த பாக்டீரியாக்கள் நம் உடலில் பெருகி, தீமை தரும் பூஞ்சான்கள் ஒழியும். நல்ல பாக்டீரியாக்களை நம் உடலில் உருவாக்க லேக்டோபேசில்லஸ் மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர். இந்த தொற்றுநோய், தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ யாருக்கு ஏற்பட்டாலும், மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுக்கவும், நோய் குணமாகவும் உடனடியாக மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முடிவுரை:

த்ரஸ்ட் எனப்படும் இந்த பூஞ்சான் தொற்றினால், உலகம் முழுவதும் உள்ள தாய் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆரோக்கியமான சாப்பாடும், சுகாதாரமான வாழ்க்கை மட்டுமே இந்த நோயை தடுக்கும் சிறந்த முறையாகும். இந்த சிறந்த முறைகள் மூலம் த்ரஸ்ட் மட்டுமல்ல. எல்லா நோய்களையும் வரும்முன்பே விரட்டலாம்.