கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரத்தசோகைக்கான உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்

கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரத்தசோகைக்கான உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்

 

உடலில் உள்ள உறுப்புகளுக்கு பிராணவாயு கொண்டு செல்லும் சிவப்பு அணுக்களின் அளவு இரத்தத்தில் குறைவாக இருந்தால், அது இரத்தசோகை எனப்படும். கருவில் வளரும் குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து சேர்வதற்காக தாயின் உடல் அதிகம் உழைப்பதால், கர்ப்பகாலத்தில் தாய்க்கு ரத்தசோகை ஏற்படலாம். கர்ப்பகாலத்தில் தாயின் ரத்தஅளவு 30-50% வரை அதிகரித்து, இதயத்துடிப்பு வேகமாகஇயங்கும். சிவப்புரத்த அணுக்கள் உருவாக தேவையான ஊட்டச்சத்து குறைந்தால், அது ரத்தசோகை ஏற்படுத்தலாம்.

ரத்தசோகையில் பல வகைகள் இருந்தாலும், பரவலாக கர்ப்பமான பெண்களுக்கு ஏற்படுவது இரும்புச்சத்து குறைபாடு ரத்தசோகை, ஃபோலேட் குறைபாடு ரத்தசோகை மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு ரத்தசோகை. இத்தகைய சத்துக்கள் மிகக் குறைவாக இருக்கும் உணவுகளை உண்பதாலும், இந்தசத்துகள் உடலில் சென்று சேர்வதற்கு சில தடைகள் இருப்பதாலும் இந்த குறைபாடு ஏற்படுகிறது. ஆரோக்கியமான சிவப்புரத்த அணுக்கள் உருவாக இத்தகைய ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுவதால், இதன்குறைபாடு சிவப்புரத்த அணுக்கள் உருவாவதை பாதித்து, ரத்தசோகை ஏற்பட காரணமாகிறது.

ஒரு தாயின் உடலில் ரத்தசோகை ஏற்படுவதற்கு பலகாரணிகள் உள்ளன. பல குழந்தைகளை ஒரே கருவில் சுமப்பது, குறுகிய காலத்தில் இருமுறை கருத்தரிப்பது, இரும்புச்சத்து குறைவான உணவு உட்கொள்வது, கர்ப்பகாலத்திற்கு முன்னால் மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது ஆகியவை சில காரணிகள் ஆகும். இத்தகைய காரணிகள் உடலின் மீது அதிக தேவைகளை சுமத்தும், எனவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

ரத்தசோகைஉள்ளதாய்க்குஏற்படும்அறிகுறிகள்

  • வெளிறியதோல்
  • மயக்கம்
  • அதிக இதயத்துடிப்பு
  • நெஞ்சு வலி
  • மூச்சுத் திணறல்
  • கவனச் சிதறல்

உடலின் பல்வேறு உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் பிராண வாயு செல்வது பாதிப்பதால், இத்தகைய அறிகுறிகள் ஏற்படுகின்றன. முதலில் இத்தகைய அறிகுறிகள் வெளியே தென்படாமல் இருந்தாலும், மெதுவாக வெளியே தெரிந்து, பின்னர் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் ஆபத்தாக மாறலாம். ரத்தசோகையானது பிறவிக் குறைபாடுகள் மற்றும் பிரசவகால இறப்புகளுடன் தொடர்புடையதாக இருப்பதால், இத்தகைய அறிகுறிகளை காணும் தாய்மார்கள் கவனம் மேற்கொள்ள வேண்டும். சத்துமாத்திரைகளை தானே உட்கொள்வதை விட, மருத்துவ உதவி பெறுவதே மிக முக்கியமாகும்.

இரும்புச்சத்து மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து அதிகரிக்கும் உணவுகள், குறிப்பாக உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள் ஆகியவற்றை உட்கொள்வதே ரத்தசோகைக்கான பொதுவான சிகிச்சையாகும். தீவிர பாதிப்புகளுக்கு இரத்தம் செலுத்துதல் தேவைப்படும். சிகிச்சைக்கு பிறகும் தேவையான ஊட்டச்சத்துகளை உட்கொள்ளுதல் அவசியமாகும். மருத்துவர் உதவியுடன் ஊட்டச்சத்து மருந்துகள் உட்கொள்ளலாம் அல்லது உடலில் ஊட்டச்சத்துகள் சேரும் வகையிலான உணவுகள் உட்கொள்ளலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வதே சிறந்தது ஏனெனில் மருந்துகளால் ஏற்படக்கூடிய உபாதைகளை அது தடுக்கிறது.

இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், ரத்தசோகை குணமாவது மட்டுமின்றி, மீண்டும் ஏற்படாமல் தடுக்கும். இத்தகைய உணவுகள் ஊட்டச்சத்து கொண்டிருப்பது மட்டுமின்றி, அது உடலில் சேர்வதற்கும் உதவுவதாக இருக்க வேண்டும்.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்

ஒருவரிடம் இரும்புச்சத்து குறைபாடு ரத்தசோகை கண்டுபிடிக்கப்பட்டால் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும். இது நோய் அறிகுறிகளை தடுப்பது மட்டுமின்றி சிறந்த பிராண வாயு கிடைக்க ஆரோக்கியமான ரத்தசிவப்பணுக்கள் உருவாக வழிவகுக்கும். கர்ப்பகாலத்தில், இரும்புச்சத்திற்கான தினசரி தேவை 30 மி.கி. என பரிந்துரைக்கப்படுகிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவு சைவ அல்லது அசைவ உணவு வகைகளிருந்து பெறலாம்.

இரும்புச்சத்து நிறைந்த அசைவ உணவுகள் மாட்டிறைச்சி, கோழி முட்டை கரு, வான் கோழி மற்றும் ஈரல். கர்ப்பகாலத்தில் ஈரல் தவிர்க்கப்பட வேண்டும் ஏனெனில், அதிலிருக்கும் ஆரோக்கிய மற்ற வைட்டமின் ‘ஏ’வானது பிறவிக்குறைபாடுகளுடன் தொடர்புடையது. வாரத்திற்கு ஒரு முறை ஈரல் உட்கொள்வது பாதுகாப்பாகும்.

இரும்புச்சத்து நிறைந்த சைவஉணவுகள் அடர் பச்சை நிறக்கீரைகள். அவரை, ப்ராக்கோலி, செறிவூட்டிய  தானியங்கள் மற்றும் ரொட்டி. பெர்ரி போன்ற சதைக்கனி, உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகள், கொட்டைப்பழம், ஆரஞ்சு மற்றும் தர்பூசணி ஆகிய பழங்கள். அவித்த முட்டை, வேர்க்கடலை மற்றும் துருவிய தேங்காயும் உட்கொள்ளலாம்.

சைவ உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்புச்சத்தை விட பால் பொருட்களிலிருந்து கிடைக்கும் இரும்புச்சத்து உடலில் வேகமாக சேர்கிறது. பால் தவிர்ப்பவர்கள், வைட்டமின் ‘சி’ நிறைந்த உணவுகள் உட்கொள்வதின் மூலமாக இரும்புச்சத்து உடலில் சேர்க்கலாம்.

உடலில் இரும்புச்சத்து சேர்வதை கால்சியம் தடுக்கிறது. எனவே இரும்புச்சத்து குறைபாடு உடையவர்கள் கால்சியம் உணவுகளையும் இரும்புச்சத்து உணவுகளையும் சேர்த்து உண்ணக்கூடாது. மாறாக கால்சியம் உணவுகளை 2-3 மணி நேரம் கழித்து உண்ணலாம்.

ஃபோலேட் உள்ள உணவுகள்

ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் என்பது நீரில் கரையக் கூடிய வைட்டமின். அது சிவப்புரத்த அணுக்கள் மற்றும் பிற ரத்த அணுக்கள் உருவாக அத்தியாவசியமானதாகும். கர்ப்பமான தாயின் உடலில் ஃபோலேட் குறைவாக இருந்தால், அது உடலில் ரத்தசிவப்பணுக்கள் உருவாக்கும் ஆற்றலை குறைக்கும். மேலும் நரம்புக்குழாய் கோளாறு மற்றும் குறைந்த உடல் எடை போன்ற கருவில் ஏற்படும் குறைபாடுகளோடு தொடர்புடையது.

ஃபோலேட் அடங்கிய அடர் பச்சை நிற கீரை காய்கறிகள், அரிசி, சிட்ரஸ் அமிலம் கொண்ட பழங்கள் ஆகியவற்றை உண்பதால் ஃபோலேட் குறைபாட்டை குணப்படுத்தலாம். பல தானியங்களிலும் ஃபோலேட் உள்ளது. கர்ப்பமான பெண்கள் தினசரி உட்கொள்ள வேண்டிய ஃபோலேட் அளவு 400 – 600 மி.கி.

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்

இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் போலவே, ஆரோக்கியமான ரத்தசிவப்பணுக்கள் உருவாக வைட்டமின் பி12 அவசியமானதாகும். கர்ப்பமான பெண்கள் தினசரி உட்கொள்ள வேண்டிய வைட்டமின் பி12 அளவு 2.6 மைக்ரோகிராம். பால் சேர்க்காத தீவிர சைவ உணவுகள் மற்றும் அசைவ உணவுகளில் இருந்து இரும்புச்சத்து கிடைக்கலாம். ஆனால் வைட்டமின் பி12  என்பது இறைச்சி, கோழி, பால் பொருட்களிலிருந்து மட்டும் கிடைப்பதால் இவற்றை உண்ணாத பெண்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

அசைவம் உண்பவர்களுக்கு மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆடு, மீன், பால்பொருட்கள் மற்றும் கோழி இறைச்சியில் இருந்து வைட்டமின் பி12 இயற்கையாக கிடைக்கிறது. அசைவம் உண்ணாத தீவிர சைவ பெண்கள் வைட்டமின் பி12 மருந்துகள் அல்லது வைட்டமின் பி12 செறிவூட்டிய  காலை உணவு தானியங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரத்தசோகையானது இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றின் ஊட்டச்சத்து குறைபாடுகளின் விளைவாகும். ஒரு பெண் உட்கொள்ளும் உணவில் இத்தகைய ஊட்டச்சத்துகள் குறைவாக இருப்பதாலோ அல்லது அத்தகைய சத்துக்கள் உடலில் சேர்வதற்கான ஆற்றல் குறைவாக இருப்பதாலோ இது ஏற்படலாம். இத்தகைய ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவு தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிப்பதால், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தாய் உட்கொள்ளுதல் மிக அவசியமாகும். சில உணவில் இவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. சத்து மருந்துகளும்எடுத்துக்கொள்ளலாம். மேலும், இரும்புச்சத்து போன்ற இதர ஊட்டச்சத்து உடலில் சிறப்பாக சென்று சேர்வதற்கு வைட்டமின் ‘சி’ உட்கொள்ள வேண்டும். சரியான உணவுகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனையுடன் கர்ப்பகால ரத்தசோகையை தவிர்க்கலாம்.