மகப்பேறு நேரத்தில் வரும் ஆரோக்கிய குறைபாடுகள்

மகப்பேறு நேரத்தில் வரும் ஆரோக்கிய குறைபாடுகள்

 

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் மாதங்கள் அவளுடைய வாழ்வில் மிகவும் சிறப்பான தருணங்கள் ஆகும். ஒருகுழந்தையை, அதுவும் உங்களின் குழந்தையை இந்த உலகில் வரவேற்க இருக்கறீர்கள் என்ற எண்ணமே ஆயிரம் மத்தாப்புக்கள் போன்று உங்களை பிரகாசமாக்கும். மனம் நிறைந்த மகிழ்ச்சி இருப்பினும், அதன் ஊடே சில கர்ப்பம் தொடர்பான ஆரோக்கிய சிக்கல்களும் வரும்.

குழந்தை உங்களுக்குள் உண்டாவதற்கு முன்பு உங்களுக்குள் இருந்த சிக்கல்கள் மகப்பேறு நேரத்தில் மீண்டும் தலை தூக்கலாம் அல்லது மகப்பேறு காலத்தில் புதிதாக சிக்கல்கள் உருவாகலாம். சில நேரங்களில் ஒரு குழந்தைக்கும் அதிகமாக உண்டாகும் போதோ அல்லது  முதல் குழந்தையின் பிரசவத்தின்போது நிகழ்ந்த மாற்றங்களாலும் சிக்கல் உண்டாகலாம். சரியான எடையை பராமரிக்காது இருந்தாலும் சிக்கலே. மகப்பேறு காலத்திலும், குழந்தையின் ஆரோக்கியத்திலும் இவை மாற்றங்கள் நிகழ்த்தலாம்.

இந்த கட்டுரையில் மகப்பேறு காலத்தில் என்ன என்ன சிக்கல்கள் நேர வாய்ப்பு உள்ளது, அவற்றை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என காண உள்ளீர்கள்.

கர்ப்பகால நீரிழிவு நோய்

மகப்பேறு காலத்தில் இரத்தத்தில் அதிக அளவு சக்கரை இருத்தல், கர்ப்பகால நீரழிவு நோய் எனப்படுகிறது. 4% பெண்கள் மகப்பேறு காலத்தில் இந்த சிக்கலுக்கு உண்டாகின்றனர். மகப்பேறு காலத்தின் முடிவினில் தான் இது தெரிய வருகின்றது. முன்னர் அதற்கான அறிகுறிகள் எதுவும் இருப்பதில்லை.

கர்ப்பகால நீரிழிவுக்கு காரணம் என்ன ?

மகப்பேறு காலத்தில் உடலில் உண்டாகும் மாற்றங்கள், ஹார்மோன் அளவுகள் மேலும் கீழுமாக இருத்தல், இவை காரணமாக சில பெண்களின் உடல் இன்சுலினுக்கு ஏற்றவாறு இயங்குவதில்லை. இந்த இன்சுலின் ஹார்மோன் கணையத்தில் உள்ள செல்களால் உருவானது. நாம் உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தி சேமித்து வைத்து பின்பு உடலுக்கு தேவைப்படும்போது மீண்டும் மாற்றுவதற்கு உதவும். எனவே இந்த இன்சுலின் அளவு குறைவாக இருந்தாலோ அல்லது அந்த இன்சுலின் கூறுவதற்கு உடல் செவிசாய்க்கவில்லை என்றாலோ இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும்.

ஆபத்தின் விளிம்பில் இருப்பது யார் ?

மகப்பேறு காலத்தில் இன்சுலின் எதிர்ப்பு என்பது சிறிதளவு இருப்பது இயல்பான ஒன்றே. ஆனால் சில பெண்களில் இந்த சிறிதளவே கர்ப்பகால நீரிழிவு நோய் உண்டாக போதுமானதாக இருக்கும். மேலும் சில காரணிகள் கர்ப்பகால நீரிழிவு நோக்கி உங்களை கொண்டு செல்லும்.

அவை :

 • உடல் எடை பருமனாக இருப்பது.
 • முதல் குழந்தை பிறப்பின் போது கர்ப்பகால நீரிழிவு இருந்திருத்தல்.
 • அதிக எடையுடன் ஒரு பிள்ளை முதல் கர்ப்பத்தில் பிறந்திருத்தல்.
 • பெற்றோர்கள் அல்லது உடன்பிறப்புகள் எவருக்கேனும் 2ஆம் வகை நீரழிவு இருத்தல்.
 • பீ .சி.ஓ.எஸ் : கருப்பைகட்டிகள்இருத்தல்.
 • நீரழிவுக்கு முந்தைய நிலையில் இருத்தல்.

இதனை எதிர்கொள்ளவது எவ்வாறு ?

அனைத்து நேரங்களிலும் கர்ப்பகால நீரழிவு தவிர்க்க இயலாது. இருப்பினும், உடல் எடை அதிகமிருப்பது ஒரு முக்கிய காரணியாகும்.  கர்ப்பத்திற்கு முன்பும், கர்ப்பத்தின் போதும் சரியான உணவை சரியான அளவுகளில் உண்டு வந்தால், கண்டிப்பாக கர்ப்பகால நீரழிவு வருவதற்காகன வாய்ப்பை குறைக்கும். உடல் எடையை சரியாக பராமரித்து வந்தால் குழந்தை பெற்ற பின்பு  2ஆம் வகை நீரழிவு வராது இருக்க உதவும்.

கர்ப்பகால நீரழிவு வந்தாலும், சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சை பெரும் பெண்கள்,  ஆரோக்கியமான குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.  இரத்தத்தில் சக்கரையின் அளவுகள் கட்டுக்குள் இல்லாத போது தான் சிக்கல்கள் உருவாகின்றன. கர்ப்பகால நீரழிவு நோயின் காரணமாக பிரசவித்த பின்பு 2ஆம் வகை நீரழிவு நோய் வரும் வாய்ப்பை, சரியான உணவு, உடற்பயிற்சி, எடையை பராமரித்தல் மூலமாக குறைக்க முடியும்.

இரத்தசோகை (இரும்புச்சத்துகுறைபாடு):

உங்கள் உடல் சரியான அளவுகளில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யாத நிலையை இரத்தசோகை என்பார்கள். இந்த சிவப்பணுக்கள் உடலில் பிராண வாயுவை திசுக்களுக்கு கொண்டு செல்லும் பணியை செய்கின்றன. சரியான அளவில் திசுக்களுக்கு பிராண வாயு கிடைக்காத போது, அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. மகப்பேறு காலத்தில் இரத்தசோகையை சாதாரணமாக கருதக்கூடாது. அதன் காரணமாக, எடை குறைவாக குழந்தைகள் பிறத்தல், பிரசவ தேதிக்கு முன்பே குழந்தை பிறத்தல், இறந்து பிறத்தல் என பல சிக்கல்கள் உருவாகலாம்.

மகப்பேறு காலத்தில் அதிக அளவில் இரத்தம் பெண்களின் உடலில் உற்பத்தி ஆகும். குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தாயிடம் இருந்து ரத்தத்தின் மூலமாகதான் அதற்கு போய்ச் சேரும். எனவே இந்த நேரத்தில் இரத்தசோகை உண்டாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் முதலிலேயே இதனை கண்டுபிடித்து விட்டால், எளிதாக இதனை குணப்படுத்தலாம். ஆனால் சிகிச்சை அளிக்காது விடுபட்டால், தாய் மற்றும் குழந்தைக்கு இது ஆபத்தாக முடியலாம்.

இரத்தசோகைக்கான அறிகுறிகள் :

முதலில் இரத்தசோகைக்கான அறிகுறிகள் பிரசவ நேரத்தில் உண்டாகும் மாற்றங்கள் என ஒதுக்கப்படலாம், ஆனால் சிகிச்சை அளிக்காது விடுபட்டால் இந்த அறிகுறிகள் மோசமடையலாம்.

அவையாதெனில் :

 • அதிக உடல் எடை
 • சோர்வு அல்லது களைப்பு
 • தலை சுற்றல்
 • மூச்சு திணறல்
 • தோல், உதடு, மற்றும் நகங்களில் நிறமின்மை
 • மார்பகவலி அல்லது ஒழுங்கற்ற இருதய துடிப்பு.

மகப்பேறு காலத்தில் இரத்தசோகையை எவ்வாறு தவிர்ப்பது ?

உணவின் மூலம் சரியான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் இரத்தசோகையை தவிர்க்க இயலும். மருத்துவர்கள் கர்ப்பமாக உள்ள பெண்களை தினமும் 30 மில்லிகிராம் எடுக்க பரிந்துரைக்கின்றனர்.

இரும்புசத்து அதிகம் உள்ள உணவுகள்:

 • சிவப்பு இறைச்சி மற்றும் கோழி
 • முட்டை
 • பச்சை காய்கறி மற்றும் கீரைகள்
 • பீன்ஸ் மற்றும் பயிருகள்
 • பாதாம், முந்திரி போன்ற கொட்டை வகைகள்.

உணவு மூலம் மட்டுமே உடலுக்கு தேவையான இரும்புசத்து கிடைப்பது சற்று சிரமம் என்பதால், இரும்புசத்துள்ள மாத்திரையை உணவோடு சேர்த்து எடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது. அதே நேரம் வைட்டமின் சீ அதிகமுள்ள உணவுகளும், இரும்புசத்து உடலில் சேர உதவுகின்றன.

முன் சூல் வலிப்பு (ப்ரீஎக்ளாம்சியா):

இரத்த அழுத்தம் முன்பு இல்லாது இருந்து மகப்பேறு காலத்தில் ஏற்பட்டால் அதனை முன் சூல்வலிப்பு (ப்ரீஎக்ளாம்சியா) எனக் கூறுவர். சிறுநீரில் அதிக அளவில் புரதம் இருத்தல் மற்றும் கால்கள் மற்றும் கைகளில் வீக்கம் இருத்தலும் இந்த நிலை உள்ள பெண்களுக்கு ஏற்படும். மகப்பேறு காலத்தின் கடைசி கட்டத்தில் தான் பெரும்பாலும் இந்த சிக்கல் தலைதூக்கும். சில நேரங்களில் முன்னதாகவும் ஏற்படலாம்.

இதனை முன்னதாவே கண்டறிந்து சிகிச்சை பெறாது இருந்தால், ப்ரீஎக்ளாம்சியா எனப்படும் சினைப்பருவ வலிப்பு நோய் உண்டாகி தாய் சேய் இருவரையும் சிக்கலில் தள்ளலாம். சில நேரங்களில் மரணத்திலும் முடியலாம்.

முன் சூல்வலிப்பு வர என்ன காரணம்?

நஞ்சுக்கொடி சரியாக பணியாற்றாததால் உண்டாகும் ப்ரீஎக்ளாம்சியா மற்றும் எக்கிளாம்சியா இரண்டிற்கும் எது காரணம் என உறுதியாக தெரியவில்லை. குறைவான ஊட்டச்சத்து மற்றும் அதிக அளவில் கொழுப்பு உடலில் இருத்தலே காரணமாக இருக்கலாம் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கருப்பைக்கு சரியாக இரத்தம் செல்லாது இருத்தல் மற்றும் மரபியலும் காரணிகளாக கருதப்படுகிறது.

எவருக்கு முன்சூல் வலிப்பு (ப்ரீஎக்ளாம்சியா) ஏற்படும் ஆபத்து உள்ளது ?

முதல் முறை பிரசவிக்கும் பெண்களிலும் , பதின்வயதில் உள்ள பெண்களிலும் , 40 வயதை கடந்த பெண்களிலும் இது அதிகம் காணப்படுகிறது. மகப்பேறுக்கு முன்பு உயர் ரத்த அழுத்தம் இல்லாத பெண்களில் இது உண்டாகும் என கூறப்பட்டாலும்,

இதற்கான மற்ற காரணங்கள் யாதெனில் .

 1. இரத்த அழுத்தம் தொடர்பான சிக்கல் மகப்பேறுக்கு முன்பாகஇருத்தல்.
 2. முன்சூல்வலிப்பு (ப்ரீஎக்ளாம்சியா) குடும்பத்தில் வேறு எவருக்காவது ஏற்பட்டிருத்தல்
 3. அதிக எடை
 4. கருப்பையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிசுக்கள் இருத்தல்.
 5. நீரழிவுநோய், சீறுநீரக சிக்கல், முடக்குவாதம்இருத்தல்.

முன்சூல் வலிப்பின் அறிகுறிகள் :

சிறுநீரில் அதிகமான புரதம் இருத்தல் மற்றும் உயர்ரத்த அழுத்தத்தை தாண்டிமேலும் சில அறிகுறிகள் இருக்கின்றன

 • உடலில் நீர் சேர்வதன் காரணமாக திடீரென உடல் எடை வேகமாக அதிகரித்தல்
 • வயிற்று வலி
 • விட்டு விட்டு அதிகமான தலைவலி இருத்தல்.
 • வாந்தி மற்றும் தலைசுத்தல்
 • பார்வைக் கோளாறு

கீழ்வரும் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது நலம்

 1. வயிற்றின் வலதுபுறத்தில் வலி அதிகமாக இருந்தால்
 2. 130/80mm hg மேல் இரத்த அழுத்தம் இருந்தால்
 3. 1 அல்லது 2 நாட்களுக்கு உள்ளாகவே உடல் எடை அதிகரித்தால்
 4. தலை சுற்றி பார்வை மங்குவது போல தோன்றினால்

முன்சூல் வலிப்புக்கான  (ப்ரீகிளம்ப்சியா) சிகிச்சை:

இதற்கு அனைவரும் கூறும் ஒரு தீர்வு குழந்தையை பிரசவித்தல். எந்த நேரத்தில் பிரசவம் பார்க்க இயலும் என்பதை உங்கள் மருத்துவர் கூறுவார். கருப்பையின் உள்ளே குழந்தையின் நலம் மற்றும் நிலைமையின் தன்மையை பொறுத்து இது மாறுபடலாம்.

கர்ப்பம் உண்டாகி 37 வாரங்களில் இந்த நிலைமை ஏற்பட்டால், பிரசவ வலியை செயற்கையாக உண்டாக்கவோ அல்லது அறுவை சிகிச்சை மேற்கொள்ளவோ வேண்டும். இது நிலைமை மோசமடைவதை தவிர்க்கும். ஆனால் பிரசவத்திற்கான நேரம் நெருங்கவில்லை என்றால் இதற்கு சிகிச்சை அளிக்க மருத்துவரால் இயலும். 9 மாதங்கள் முடிந்து குழந்தையை பிரசவிப்பது குழந்தைக்கு நல்லதாகும்.

இந்தக்கட்டுரையில் கூறப்பட்டிருப்பது பிரசவத்தின்போது தலை தூக்கக்கூடிய சில ஆரோக்கிய சிக்கல்களே. ஆரோக்கியமான முறையில் பிரசவம் நிகழ “சரியாக உண்ணுதல், புகைபிடிக்காது இருத்தல், மது அருந்தாது இருத்தல், சரியான ஓய்வு” இவை இருந்தாலே போதும் என்கின்றனர். மேலும் பிரசவத்தின்போது என்ன என்ன நிகழ வாய்ப்புகள் உள்ளது என்பதை அறிந்து வைத்திருப்பதன் மூலம், உங்கள் உடலுக்கு என்ன நிகழுகிறது என்பதை அறிய இயலும். அதை வைத்து தேவையான தீர்வுகளை நீங்கள் நாடலாம்.